Sunday, 23 July 2017

பொம்மிக் குட்டியும் பூனைக் குட்டிகளும்..

சங்கம் துவங்கி நவீனம் வரை
கலைந்து கிடந்த புத்தகங்களை
ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி
கால் எக்கி வாகான இடமொன்றில்
பூனை வரைந்தாள் பொம்மி

இரண்டரை வயது பூம்பாதங்கள்
வலிக்கும் போதெல்லாம்
பின்னங்கால் ஊன்றி இடுப்பில் கைவைத்து
சலித்து மிதிப்பாள் புத்தகங்களை

Thursday, 20 July 2017

கண்டது மொழியும் கவிதை...
                தோழர் ஷாஜஹான் எனது நண்பர்.  அஃதென்ன தோழர் என்று சொன்ன பிறகு நண்பர் என்று சொல்லல் வேண்டும்  என  வியக்கலாம்.  தொழுத கையுள்ளும் பகை ஒடுங்கும்  என்பதும் மெய்தானே! முரண் என்பது வேறு  பகை  என்பது வேறு.  நல்ல பகையாக இருந்தால் அதனை நேர் கொள்ளலாம். இராவணன் கூற்றாகக் கம்பன் சொல்வது;  நாசம் வந்து உற்ற காலை  நல்லதோர்  பகையைப் பெற்றேன்  என்று.  நல்ல பகை  போலக் கர்வம் கொள்வது போலல்ல  அற்பப் பகை கண்டு. இந்த சந்தர்ப்பத்தில் சிறுமை அரசியலுக்குள் நுழைவது  அத்தனை பொருத்தமான  செயலல்ல
                சென்னையில் ஒரு சந்தர்ப்பத்தில், ‘உயிர் எழுத்து நிகழ்ச்சிக்காக நண்பர் ஷாஜஹானுடன் ஒரே விடுதி அறையை இரு நாட்கள் பகிர்ந்து கொண்டேன். வெளிப்படையாகப் பேசுகிறவர் அல்லது என்னிடம்  வெளிப்படையாக இருப்பவர்.  பெரும்பாலும் எமக்குள் ஒத்த கருத்துக்கள் உண்டு.  இலக்கியம், இசை,  அரசியல் என்ற வைப்பு முறையில் உரையாடல்  இருக்கும்.  ஆழமான இசைப்பிரியர். அதையொரு ஆடம்பர அடையாளமாக இல்லாமல், அந்தரங்கமான அனுபவமாகக் காண்கிறவர். எனக்குப் பிரியமான இந்து°தானி இசைக்  கலைஞர்களிடம் அவருக்கும்  ஈடுபாடு உண்டு.  2013-ல் வாழ்நாள் சாதனைக்கானஇயல் விருது வாங்க நான் கனடா சென்ற போது, மூத்த  எழுத்தாளர் .முத்துலிங்கத்துக்காக  அவர் வாசித்திருக்க  வாய்ப்பில்லாத சில  படைப்பாளிகளின்  சிறுகதைத்  தொகுப்புகள் எடுத்துப் போனேன். சந்திரா, இளஞ்சேரல், என்.ஸ்ரீராம், தமயந்தி, லஷ்மி சரவணக்குமார் என  அவற்றுள் ஒன்று ஷாஜஹான் தொகுப்பு.  

Wednesday, 19 July 2017

ஜான்சிராணியின் குதிரை... (தேவராஜ் விட்டலன்)சமீபத்தில் நண்பர் தேவராஜ் விட்டலனின் ஜான்சிராணியின் குதிரை கவிதைப் புத்தகத்துக்கு எழுதிய அணிந்துரை...

அகமும் புறமுமாய் ….

        கவிஞர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். அவர்களின் உணர்வுகளின் வடிகால்களே கவிதைகள். வெற்று உணர்ச்சிகள் கொண்ட கவிதைகள் பயனளிப்பதோ நீடித்து வாழ்வதோ இல்லை. சமூக அக்கறையுடனான கவிதைகள் தமது தார்மீக கோபத்தால், பொங்கி வழியும் அன்பினால், வெடித்துக் கிளம்பும் ரௌத்திரத்தால் தம் ஆயுளை நீட்டித்து படைப்பாளியையும் நினைவில் நிறுத்துகின்றன.

        தேவராஜ் விட்டலன் தனது முதல்தொகுப்பில் உணர்ச்சிகரமாகத் தொடங்கி தற்போதைய ‘ஜான்சிராணியின் குதிரையில்’ சமூக அக்கறை கொண்ட கவிதைகளோடு பரிணமித்திருக்கிறார். பணி நிமித்தமாய் தெற்குவடக்காய் நீண்ட பயணங்கள் தந்த அனுபவங்களை உள்வாங்கி கவிதைகளாக்கியுள்ளார்.

                        ‘ பொம்மைகள் மொழிந்தன
                         பொம்மைகள் விற்பவள்
                         பொம்மைகள் மட்டும் விற்பதில்லையென ’
என்கிற எளிய மனிதர்களை அவரது பயணம் அவருக்கு கண்டுணர்த்தியுள்ளது.

Saturday, 15 July 2017

அவரவர் வீடு..


வீட்டை விற்று
நாலு தெரு தாண்டிக்
குடிவந்தும் கூட
ஏதேனும் வேலையாய்
பழைய தெரு வழிதான்
அம்மா போகும்
அக்கா மட்டும்
’வேண்டாம்டா’ என்று
சுற்றிப் போகும்

‘நாம வச்ச முருங்கை’ என
காய்களுடன் பாட்டி பூரிக்கும்போது
முகர்ந்து பார்க்கும் அம்மாவுக்கு
வேறு முகம் வந்து
ஒட்டிக் கொள்ளும்

Friday, 26 May 2017

புத்தம் சரணம்…வெள்ளை வண்டிகளில்
கண்கள் கட்டி ஏற்றப்பட்ட
அண்ணன் தம்பி மீள்வரோ
எனும் துயரம் அத்தீவில்

அண்ணன் பட ரிலீஸ் பற்றி
ஆருடங்கள் ஆர்ப்பரிக்கும்
மலந்துடைக்கும் சுவரொட்டிகள்
நம் வீதிகளில்